சேலம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அரசின் அனுமதியுடன் பார் எனப்படும் மதுக்கூட வசதி உள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு மதுக்கூட வசதி இல்லை. இந்நிலையில் சேலம் மாநகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஏப். 28- ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அனுமதி பெறாத மதுக்கூடங்கள், அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாத மதுக்கூடங்கள் என மொத்தம் 12 மதுக்கூடங்கள் விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவது தெரிய வந்தது.
இந்த 12 மதுக்கூடங்களும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக மதுக்கூடங்களை நடத்தியதாக அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.