இடைப்பாடி அருகே, டாஸ்மாக் பார் ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் காங்கேயம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள தண்ணீர்தாசனூரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடை அருகே சட்ட விரோதமாக ஒரு மதுக்கூடம் (பார்) இயங்கி வருகிறது.
![tasmac employee incident surrender court](http://image.nakkheeran.in/cdn/farfuture/LqjvJIhtHvwIGfiYNoCppbW8xyJKs9T5c9TllDBqIx0/1584127049/sites/default/files/inline-images/salem333_0.jpg)
இந்த மதுக்கூடத்தில் இடைப்பாடி ஆலச்சாம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (32), அண்ணாமலை (30) உள்பட நான்கு பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 12ம் தேதியன்று, பூமணியூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் மது அருந்தினார். அவர் மதுக்கூடத்தின் பக்கவாட்டு சுவர் மீது சாய்ந்துள்ளார். அப்போது திடீரென்று அந்த சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் ராமமூர்த்திக்கும், துரைராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ், சம்பவத்தன்று இரவு கூலிப்படை கும்பலுடன் வந்து ராமமூர்த்தியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். அண்ணாமலைக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக துரைராஜ், மகேந்திரன், வாசுதேவன் உள்ளிட்ட 6 பேர் மீது இடைப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்தநிலையில், இடைப்பாடி கல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (22) என்பவர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.