![tamizhaga vazhvurimai katchi members arrested in vengaivasal issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q7p9Ri_wdcporoKcAmaEB_COZ5cg_h62ynQI6b34-q8/1678702367/sites/default/files/inline-images/th-4_217.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலிஸ் அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்த குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் சிபிசிஐடி போலீசார் உண்மை அறியும் சோதனை அனுமதி பெறக் காத்திருக்கின்றனர்.
![tamizhaga vazhvurimai katchi members arrested in vengaivasal issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/ooi4K5Xr75AWkrhSRv-CCjvKJhqyy_vedUhogSc35kk/1678702338/sites/default/files/inline-images/th-3_452.jpg)
மற்றொரு பக்கம் பல்வேறு அமைப்புகளும் அறிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் மனிதக் கழிவு கலந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என்று தண்ணீர் தொட்டி உடைப்பு போராட்டத்திற்கு DYFI பேரணியாக செல்ல நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணைக்கு சாட்சியாக உள்ள தண்ணீர் தொட்டியை வழக்கு முடியும் வரை உடைக்கக் கூடாது என்று சமாதானம் கூறி அனுப்பினர்.
இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை காலை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மேலே ஏற முடியாதவாறு தடை செய்யப்பட்டிருந்த ஏணியில் யாருக்கும் தெரியாமல் மேலே ஏறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் கா.முருகானந்தம், புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் அருள் ஒளி, சேலம் மாவட்ட மாணவரணி கவியரசன், சிவகங்கை நகர செயலாளர் அஜித் செல்வராஜ் ஆகியோர் சம்மட்டியுடன் தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று முழக்கமிட்டதுடன் சம்மட்டியால் தண்ணீர் தொட்டியை உடைக்கவும் செய்தனர். சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மேலும் போலீசாரை வரச் செய்துள்ளனர். அப்பகுதி மக்களும் திரண்டனர். 4 பேரையும் கீழே இறங்கச் செய்து கைது செய்தனர்.
![tamizhaga vazhvurimai katchi members arrested in vengaivasal issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Cr6mHdv9MQuC9Fz2VlwcovMKF32WbLq-q3oPyYZh_oA/1678702312/sites/default/files/inline-images/th-2_1317.jpg)
அங்கு திரண்டிருந்த இறையூர் கிராம மக்கள் இது போல தான் யாருக்கும் தெரியாமல் மேலே ஏறி மனிதக் கழிவு கலந்துள்ளனர். மேலும் வழக்கின் முக்கிய சாட்சியான தண்ணீர் தொட்டியை உடைத்து சாட்சி, தடயங்களை அழிக்க முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிச்சயம் வழக்குப் பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்தாலும் முதல் தகவல் அறிக்கையை காட்ட வேண்டும் அதுவரை காத்திருப்போம் என்று உறுதியாக கூறிவிட்டனர் இறையூர் மக்கள். அதே போல வேங்கைவயல் மக்கள் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனால் மீண்டும் வேங்கைவயல் பிரச்சனை பரபரப்பை கிளப்பியுள்ளது.