!['' Tamils are the victims of the Second World War '' - Vck's Vanniyarasu](http://image.nakkheeran.in/cdn/farfuture/ebmEeft1qalTaHFwndeZViu0iTrn7LskPTQgGrsL44Y/1648089540/sites/default/files/inline-images/zzzzzzzzeqeqqe.jpg)
கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கையில் ஒரு சவரன் தங்க நகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த அளவுக்கு நிதி சிக்கலைச் சந்தித்துள்ள இலங்கைக்குக் கூடுதல் பொருளாதார பாரத்தை கூட்டியுள்ளது உக்ரைன்-ரஷ்ய போர். பெட்ரோல், டீசல், பருப்பு, அரிசி, எண்ணெய் என அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்து மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. இலங்கை பொதுமக்கள் கடும்விலை உயர்வால் வாழ்வை நகர்த்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 22 ஆம் தேதி தலைமன்னாரிலிருந்து தமிழகம் தப்பித்து வர முயன்ற 6 பேரை தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இந்தியக் கடலோர காவல்படை அதிகாரிகள் பிடித்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாகியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சமடைய நினைக்கும் ஈழத் தமிழர்களுக்குத் தனி முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என விசிகவின் வன்னியரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, ''இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் தமிழர்களை ஏற்கனவே உள்ள முகாம்களுக்கு அனுப்பக் கூடாது. ஈழத்தமிழர்களுக்குத் தனி முகாம்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் பொருளாதார யுத்தம் என்ற இரண்டாவது போரிலும் தமிழீழத் தமிழர்களே பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.