![tamilnadu tasmac shops opening salem dmk and alliance parties](http://image.nakkheeran.in/cdn/farfuture/N4sILS6l5ht2xDbPVsVwkjEBmjrfTm13B4kXC3WBJPM/1588902825/sites/default/files/inline-images/dmk-11123.jpg)
தமிழக அரசு திடீரென்று டாஸ்மாக் கடைகளைத் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சேலத்தில் அவரவர் வீடுகள் முன்பு நின்றபடி கையில் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்பு உடைகளை அணிந்தும் அறவழியில் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
கரோனா தொற்று அபாயத்தால் தமிழ்நாடு முழுவதும் மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 17- ஆம் தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழக எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மதுப் பிரியர்கள் அண்டை மாநிலங்களுக்கு மது பானம் வாங்க படையெடுத்தனர். மற்றொருபுறம், கள்ளச்சாராய நடமாட்டமும், வீடுகளிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சும் குற்றங்களும் வெகுவாக அதிகரித்தன.
![tamilnadu tasmac shops opening salem dmk and alliance parties](http://image.nakkheeran.in/cdn/farfuture/Uvx8dz9wTOevNGwMD437PozOOF1haQBTudmKGQRD_Vc/1588902836/sites/default/files/inline-images/AIDWA-CPM.jpg)
இந்நிலையில், வியாழக்கிழமை (மே 7- ஆம் தேதி) முதல் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மதுபானம் வாங்குவோர் 6 அடி தூரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை கட்டாயம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கால் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக உழைக்கும் தொழிலாளர்கள் வேலையும், வருமானமும் இழந்து, சோற்றுக்கே திண்டாடி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் முடிவுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்கள் மத்தியிலும் கடும் ஆட்சேபணைகள் எழுந்தன.
தமிழக அரசின் முடிவைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அவரவர் வீடுகள் முன்பு சமூக விலகலைக் கடைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியாழனன்று கருப்பு உடை அணிந்து அறவழியில் போராட்டம் நடத்தினர்.
![tamilnadu tasmac shops opening salem dmk and alliance parties](http://image.nakkheeran.in/cdn/farfuture/hbQfjF0nrz8HqdYC9KMwVKH74JAtxjLSPs2uU1VfBME/1588902848/sites/default/files/inline-images/dyfi_2.jpg)
சேலத்தில், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கருப்பு சட்டை அணிந்து, அவருடைய வீட்டு வாசல் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் மீது அக்கறையின்றி செயல்படும் அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, வின்சென்ட் பகுதியில் உள்ள தன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். டவுன் ரயில்நிலையம் அருகில் உள்ள தனது வீட்டு முன்பு நின்றுகொண்டு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கருப்புக்கொடி ஏற்றி ஆளுங்கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
மேலும், சேலம் எம்பி பார்த்திபன், எம்டிஎஸ் நகரில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்று கொண்டு அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் வீரபாண்டி ராஜா, வீடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோரும் அதிமுக அரசைக் கண்டித்தும், மதுவிலக்கை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார், தனது வீட்டு முன்பு கருப்புக் கொடி ஏற்றி வைத்தும், கையில் கருப்புக்கொடி ஏந்தியும் ஆளுங்கட்சியின் மதுக்கடை திறப்பு உத்தரவுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ஹேமலதா, புவனேஸ்வரி செந்தில்குமார் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
![tamilnadu tasmac shops opening salem dmk and alliance parties](http://image.nakkheeran.in/cdn/farfuture/xijatSu5PR_SYN26tBJmhiPtpgBPiPHQBJ1DUDHS80s/1588902861/sites/default/files/inline-images/dmk-2.jpg)
ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள், 'கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் மதுக்கடையைத் திறந்த அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்', 'விளையாடாதே விளையாடாதே மக்களின் உயிருடன் விளையாடாதே', 'பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்காமல் மதுவை வழங்குவதா?', 'வெட்கக்கேடு வெட்கக்கேடு தமிழகத்திற்கு வெட்கக்கேடு' என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கரோனா பரவும் அபாயத்தால் சமூக விலகல் உத்தரவையும் கடைப்பிடித்தனர். அதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் 3 அடி தூரம் சமூக விலகலுடன் நின்றபடி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
திமுக முன்னெடுத்த இத்தகைய அறவழி மற்றும் நூதன போராட்ட உத்தியால் காவல்துறையினரும் அவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி திணறினர்.