தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.
இந்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஊரடங்கு அமலில் உள்ளபோது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். மேலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது, நோய் பாதிப்பை அதிகரிக்கும் என மனுவில் தெரிவித்தார்.
அதுபோல, வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை. எனவே, ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்
குன்றத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் என்பவர், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது எனத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும், மதுக்கடைகளைத் திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு, தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும், ஊரடங்கு முடியும்வரை மூடவேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.