அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியது. அந்த கடிதத்தில், “செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பது சிறந்ததாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அட்டர்னி ஜெனரலை அணுகி அவரது கருத்தை கேட்கிறேன். அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு குறித்து மீண்டும் தெரிவிக்கப்படும் வரை பதவி நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு அமைச்சரின் பதவியை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் இல்லை என்பதை நாலரை மணி நேரத்தில் தெரிந்துகொண்டார்கள். அதன்படி அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிக் கொண்டார். அத்வானி துணை பிரதமராக இருந்தார். முரளி மனோகர் ஜோஷி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்கள். இவர்கள் மீது அயோத்தியில் ராமர் கோவில் இடிப்பு தொடர்பான தேசத் துரோக வழக்காக அது இருந்தது. அப்போது இவர்கள் இருவரும் அந்த பதவியை வைத்துக்கொண்டு தான் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகளை சந்தித்தனர். வழக்கு, கைது, நீதிமன்ற காவல், நீதிமன்றத்தில் விசாரணை இருக்கும் போதும் இதனால் யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது.
ஆளுநருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றனர். ஒரே ஒரு உரிமை சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுதிப் பெரும்பான்மை பெற்றவர்களில் ஒருவரை அழைத்து முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் ஒரு உரிமையும் அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, யார் யார் அமைச்சராக செயல்படுவார்கள் என முதல்வர் பரிந்துரையின் படி, ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்கள். அந்த பதவியை அமைச்சர்கள் தானாக ராஜினாமா செய்கிறேன் என்று செய்து விடலாம். முதல்வர் அந்த பதவியை விட்டு விலகுவதற்கு அறிவுரை சொல்லலாம். இதை தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. அதனை மீறி உரிமை இருக்கிறது என்றால் நீதிமன்றத்தில் வழக்குகள் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் அமைச்சர் பதவியை விட்டு நீக்கப்படுவார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தண்டனை வந்தபோது அவரிடம் இருந்து அந்த பதவி போய்விட்டது. ஒபிஎஸ் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டார். சட்டப் பேரவைத் தலைவர் தான் சட்டமன்ற உறுப்பினரின் பதவியை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் பெற்றவர். அதே போன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கொடுத்ததால் அவர் பதவி இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய பதவியை ரத்து செய்தது நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான்.
தமிழக ஆளுநர் நல்ல மனிதர் தான். சீக்கிரமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர். அந்த உணர்வுகளின் வெளிப்பாடாகத் தான் நேற்று வெளியான உத்தரவு. அதே போன்றுதான் உணர்ச்சிவசப்பட்டு பேரவையில் தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். தமிழ்நாட்டை தமிழகம் எனக் கூறிவிட்டு அதன் பிறகு மாற்றிக்கொள்வார். இப்படி நிறைய கூறிக்கொண்டே போகலாம். ஆளுநர் இந்த போக்கை நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். ஆளுநரின் இந்த செயல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம்” எனத் தெரிவித்தார்.