வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 19- ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அந்தமான், மத்திய வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.