முன்பெல்லாம் பிறந்தநாள் வருகிறதென்றால், கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி தொகுதி பக்கமே தலைகாட்ட மாட்டார். ஏனென்றால், பிறந்தநாளன்று தொகுதிக்கு வந்து, ‘வாழ்த்துகிறேன்’ எனச்சொல்லி யாராவது வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிட்டால், தலைமையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற பயம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் இத்தனை கொண்டாட்டங்கள். அதுவும் இந்த ஆண்டு அமர்க்களப்படுத்திவிட்டார்கள் விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். செவ்வாய்க்கிழமை சென்னையில் இருக்கவேண்டிய நாள் என்றாலும், சிவகாசி தொகுதிக்கு வந்து அத்தனைபேரின் வாழ்த்துக்களையும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகிலுள்ள ஈஞ்சார் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடும் நடத்தினார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மெகா சைஸில் வாழ்த்து பிளக்ஸ் பேனர்கள் வைத்திருக்கின்றனர். ‘எங்கள் மண்ணின் மன்னன் நீ.. கடாரம் வென்ற சோழன் நீ.. காலம் தாண்டி வாழ்வாய் நீ.. கழகத்தின் உலகம் நீ’ என்றெல்லாம் வாழ்த்து மழை பொழிந்துவிட்டனர். எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச்செம்மல் என்றால், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆன்மீக செம்மல் பட்டம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர் “முன்பெல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளைத்தான் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அமைச்சர்களோ, இரண்டாம்கட்டத் தலைவர்களோ, வெகுவாக அடக்கி வாசிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா லேபிலும், இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் அடையாளமாக இருந்தாலும், இனிவரும் காலத்தில் தங்களுக்கும் ‘பப்ளிசிடி’ தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மட்டுமே விளம்பரப்படுத்தி, திரைக்குப் பின்னால் முன்புபோல் நிற்பதற்கு யாரும் தயாராக இல்லை. பழைய பாணியில் செயல்பட்டால் கைப்பணத்தை செலவழிக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு என்ன பிரயோஜனம்? போட்டி நிறைந்த அரசியலில், தனது இடத்துக்கு இன்னொருவர் வர, அவர்களே வழிவகுத்தது போலாகிவிடும். இதையெல்லாம் மனதில் நிறுத்தியே, அதிமுக தலைவர்கள் காலத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள்.
சிவகாசி தொகுதி மீது கே.டி.ராஜேந்திரபாலாஜி என்னதான் அக்கறை காட்டினாலும், திட்டங்களை செயல்படுத்தினாலும், வரும் சட்டமன்ற தேர்தலில், டிடிவி தினகரனின் ஆதரவு நிலை எடுத்த 18 பட்டி மக்களில் பெரும்பாலானோர் இரட்டை இலைக்கு வாக்களிக்கும் மனநிலையில் இல்லை. இது தெரிந்தே, முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் இல்லாத விருதுநகர் தொகுதியைத் தனக்குப் பாதுகாப்பான தொகுதி என்றெண்ணுகிறார் ராஜேந்திரபாலாஜி. நாயக்கர், நாடார் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் தொகுதியில், சாதி ரீதியாகத் தன்னை அன்னியப்படுத்திப் பார்க்காமல் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் வேர்விட்டிருக்கிறது. இப்போதெல்லாம், யாராவது வயதானவர்களைத் தன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், ‘இவங்கள்லாம் கட்சிக்காரங்கதான்.. ஆனா.. வயசாயிருச்சே.. இளைஞர்களைக் கூட்டிட்டு வாங்கப்பா.. அவங்கதான் ஓடியாடி கட்சி வேலை பார்ப்பாங்க..’என்று கணக்காகப் பேசுகிறார். இளைஞர்களை ஊக்குவிக்கவும் செய்கிறார்.” என்றார்.
இந்த நேரத்தில், 2012-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவு ஏனோ நம் நினைவுக்கு வருகிறது. ’இனிவரும் காலங்களில் பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டும். மற்றபடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். நிர்வாகிகள் படங்களை வெளியிட அனுமதி இல்லை.’ என்று அதிமுக தலைமை அப்போது கறாராக நடந்துகொண்டது.
அது ஒரு காலம்; இது ஒருகாலம்.