மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு மாணவர்கள் இன்று (03/11/2020) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்) கலந்தாய்வில் பங்கேற்க இன்று (03/11/2020) முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 12- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16- ஆம் தேதி வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும். tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மருத்துவ கலந்தாய்விற்கான தேதிகள் அறிவிக்கப்படும்'. இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டில் மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நவம்பர் 18- ஆம் தேதி முதல் கலந்தாய்வு?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் நடக்க வேண்டிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கரோனா. 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தால் தாமதமாக நடக்கிறது. மருத்துவ கலந்தாய்வில் 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் 303 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,650, தனியார் கல்லூரிகளில் 1,052 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 897 இடங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.