7.5% உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 395 பேருக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் டைம் 8.01 நிமிடமாக உள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுவதில்லை. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நேரடியாகவே நடைபெறுகிறது. இன்று மாலை 05.00 மணி வரை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுவரை 34,424 பேர் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
திட்டமிட்டப்படி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் நவம்பர் 16- ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் இந்தாண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18- ஆம் தேதி (அல்லது) நவம்பர் 19- ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும். நாள்தோறும் 500 மாணவர்கள் என்ற முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 7.5% உள்ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ்.சில் 304, பி.டி.எஸ்.சில் 91 என அரசு பள்ளி மாணவர்கள் 395 பேருக்கு மருத்துவ இடம் கிடைக்கும்" என கூறினார்.