திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவில் இரு துருவங்களாக விளங்கிய திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தற்போது ஓர் உயிர் ஈருடலாக காட்சி தருவது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஓபிஎஸ் ஆதரவாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், இபிஎஸ் ஆதரவாளராக முன்னாள் அமைச்சர் சீனிவாசனும் மாவட்டத்தில் அரசியல் நடத்தி வந்தனர். இதனால் அதிமுகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இருவரும் இபிஎஸ் பக்கம் சாய்ந்தனர் பக்கத்து மாவட்டக்காரர் என்ற போதிலும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தரவில்லை.
இந்நிலையில் அதிமுகவில் நடந்த களேபரங்களைத் தொடர்ந்து இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனவுடன் முன்னாள் அமைச்சர் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியும், அதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. இப்படி இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கட்சியை வளர்க்க முடியும் என முடிவெடுத்தார்கள். தற்போது மாவட்ட அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்களை ஒரே அணியில் செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனடிப்படையில்தான் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகளை நத்தம் விஸ்வநாதனையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என சொல்லுகிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனும் சீனிவாசனை சந்திக்க வேண்டும் என சொல்லி வருகிறார்கள்.
இந்தநிலையில் சீனிவாசனை சந்திக்க சென்ற வத்தலகுண்டு நகர சிறுபான்மை அணி செயலாளர் கனிபாய் ஏலக்காய் மாலையை சீனிவாசனுக்கு அணிவித்துள்ளார். சீனிவாசனும் கனி பாயிடம் இதே மாதிரி மாலையை தம்பி விஸ்வநாதனுக்கும் நீ போட வேண்டும் என அன்பு கட்டளையிட்டுள்ளார். அதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ஏலக்காய் மாலையை போட்டிருக்கிறார் கனி பாய். இப்படி இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு ஏலக்காய் மாலையை கனிபாய் போட்டு படம் எடுத்திருக்கிறார். அதேபோல் எக்காரணத்தை கொண்டும் ஓபிஎஸ் மாவட்டத்திற்குள் தன் மூக்கை நுழைத்து விடக்கூடாது என்பதிலும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கைகோர்த்து செயல்பட்டு வருவதைக் கண்டு ரத்தத்தின் ரத்தங்களே உற்சாகமாக இருந்து வருகிறார்கள்.