கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதால் உலக மக்களையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத இரண்டு குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத ஆண் குழந்தைக்குச் சிகிச்சை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது எனத் தகவல் வெளியாகியிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 பேருக்கு எச்.எம்.பி. வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (07-01-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எச்.எம்.பி.வி. வைரஸ் பற்றிய செய்தி தொடங்கிய உடனே, நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறோம். உலக சுகாதார அமைப்பு (WHO) அமைப்பை பொறுத்தவரை, இது போன்ற அவசர கால நிலைகளில் அவர்களே அறிவிப்பார்கள். ஒவ்வொரு நாடும் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்?, என்ன என்ன வகைகளில் கண்காணிக்க வேண்டும்? என்று அவர்களே அறிவுறுத்துவார்கள். ஆனால், உலக சுகாதார அமைப்பின் சார்பில் எந்த அறிவுறுத்தலும் இல்லை. அதே போல், ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கூட இது மாதிரியான விளைவுகள் வருகிற போது அனைத்து மாநில அரசுகளுக்கும் குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள். அதுவும் கூட நேற்று மாலை வரை எந்தவித தகவலும் இல்லை.
நேற்று மாலை, நம்முடைய மருத்துவத்துறை செயலாளர் ஒன்றிய அரசின் மூலம் காணொளி வாயிலாக கூட்டம் நடத்தப்பட்டது. அதில், டெல்லியில் இருந்து அந்த துறை செயலாளர் பல்வேறு விஷயங்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள். பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பதற்றப்பட வேண்டிய எந்த சூழலும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பரவி, 2001 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இருந்தால் 3 முதல் 6 நாட்கள் வரை சளி, இருமல் போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், ஏற்கெனவே, உடல்நலம் குன்றிய நிலையில் பல்வேறு நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவேளியை கடைபிடிப்பது மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் இருந்துவருகிற நிலை தான். இனிமேல் வைரஸ்களோடு தான் மக்கள் வாழ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் ஒருவர் கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது. அதில், வீரியம் குறைவான வைரஸா? அல்லது வீரியமிக்க வைரஸா? என்பதை மட்டும் தான் நாம் பார்க்க வேண்டும். ஆனால், இந்த வைரஸை பொறுத்தவரை அது மாதிரியான எதுவும் இல்லை. 3இல் 5 நாட்களில் தானாகவே குணமாகக் கூடியது தான். இதற்கு பிரத்யேகமான எந்த சிகிச்சையும் இல்லை. எனவே, இது பற்றிய பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிக்கப்பட்ட இருவருமே நலமோடு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து சென்றால் நன்றாக இருக்கும். அந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது எல்லோரும் ஒரு நாளைக்கு அடிக்கடி கை கழுவ வேண்டும், முகக்கவசம் அணிவது போன்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.