ஒண்டிவீரன் 248- வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 3- வது முறையாக பால் விலை உயர்ந்துள்ளது. பால் கொள்முதல் செய்பவர்களுக்கும்- மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே இது போன்று செய்கிறார்கள். குறைகளை மறைக்கவே மாவட்டங்களை அ.தி.மு.க. அரசு பிரித்து வருகிறது என்றார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் அதிக லாபத்தில் செயல்படுவதாக சொல்கிறார். தமிழக முதல்வரோ நஷ்டத்தில் ஆவின் நிறுவனம் இயங்குவதாக கூறுகிறார். அவர்களுக்கு உள்ளேயே முரண்பட்ட கருத்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் தி.மு.க. துணை நிற்கும். அதனால் தான் காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க. போராட்டம் அறிவித்துள்ளது எனவும் நாங்குநேரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க. போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் துண்டு சீட்டு வைத்து பேசுவதாக பா.ஜ.க. கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், புள்ளி விபரங்களுடனும் ஆதாரத்துடனும் பேசுவதற்காக தான் துண்டு சீட்டை பயன்படுத்துகிறேன். தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோரை போன்று பொத்தம் பொதுவாக பேச மாட்டேன் என்று அழுத்தமாக கூறினார்.