இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில்தான் அதிகளவில் இருக்கிறது. வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் தனிமைப்படுத்தல், சமூக விலகல் உள்ளிட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று (11/04/2020) மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதில் 44 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 45 வயதான பெண் கரோனா பாதிப்பால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களில் கரோனா உறுதியான நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஐந்தாவதாக கரோனா உறுதி செய்யப்பட்டவர் செஞ்சியை பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.