![TAMILNADU CHIEF ELECTION OFFICER PRESSMEET AT CHENNAI](http://image.nakkheeran.in/cdn/farfuture/QuuDI-qe4lPovNNP1GnNLlHwvcRcM_0QknpNaDxCQck/1615227697/sites/default/files/inline-images/SAYTA.jpg)
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அளிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாது.
வாக்குப்பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படும். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 'மாஸ்க்' அணிந்தபடி வாக்குச்சாவடிக்கு வர வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரைச் சந்தித்துத் தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கவுள்ளோம். தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் 32.03 கோடி மதிப்புள்ள பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூபாய் 23.75 கோடி ரொக்கம் மற்றும் ரூபாய் 6 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.