இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இன்று விருதுநகர் வந்திருந்தார் அக்கட்சியின் மாநில செயலாளரான முத்தரசன். செய்தியாளர் சந்திப்பில் அவர்,
“அரசியல் ஆதாயத்துக்காக உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. கொடநாட்டில் நடந்த கொலைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருக்க வேண்டும். கண்ணும் காதும் இருக்கிறது தமிழிசைக்கு. தினமும் செய்தித்தாள் படிப்பார்: தொலைக்காட்சி பார்ப்பார் என்று கருதுகிறேன். ஸ்டாலின்தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் சென்று பார்வையிட்டார். கிராமசபை கூட்டங்களில் ஸ்டாலின் கலந்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்கும் தமிழிசை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் அவர் சென்று பார்த்தாரா? தமிழக மக்கள் நலனில் தமிழிசைக்கு அக்கறை இருந்தால், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சென்று பிரதமரைச் சந்தித்திருக்க வேண்டும். தமிழக அரசு கேட்ட ரூ.1500 கோடி நிவாரணத் தொகையைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். இதைச் செய்யாத அவர் ஏன் மற்றவர்களின் செயல்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்?
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து.. சில இடங்களுக்குக் காரில் சென்றிருந்தால், கஜா புயல் சேதப் பகுதிகளைப் பார்வையிட வராதது குறித்தும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளான கருப்புப் பணத்தை மீட்பது குறித்தும், இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பியிருப்பார்கள் பொதுமக்கள். கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று நேரடியாகவே கேட்டிருப்பார்கள். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆலை உரிமையாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். பொன் ராதாகிருஷ்ணன் முதலில் அவரது பலவீனத்தைப் பார்க்கட்டும். எங்கள் அணி பலமாகத்தான் இருக்கிறது. மற்ற அணிகளின் பலம் என்னவென்பதை தேர்தலின் போது சந்திக்கத்தானே போகிறோம்.” என்றார்.