உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களே ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இருக்கும் நிலையில், அங்கு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் கோவையில் பாஜகவின் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடந்தது. ஆகவே இதை எதிர்ப்பது என்பது மோடிவேட்டேட். அநியாயமாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது என்ற எண்ணம். இரண்டாவது சட்டத்துக்கெல்லாம் நான் படிய மாட்டேன் இஷ்டத்திற்கு செயல்படுவேன் என்று நினைக்கக்கூடிய ஒரு கும்பல் இருக்கிறது.
இது உச்சநீதிமன்ற தீர்ப்பு. அங்கு கீழே கோவில் இருந்தது. கோவிலுக்கு மேல் தான் மசூதி கட்டினார்கள் என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லி இருக்கிறார்கள். 1526 ஆம் ஆண்டு பாபர் படையெடுத்து வந்தார். அவர் அன்னியர் என்பது எல்லோருக்கும் தெரியும். 'பாபர் நாமா' என்ற ஒரு புத்தகத்தை பாபர் எழுதியிருக்கிறார். அதில் 1528-ல் ராமர் கோவிலை இடித்து அங்கு மசூதி கட்டினேன் என்று பாபர் எழுதி இருக்கிறார். ஆகவே சரித்திர ரீதியாக சிந்திக்க வேண்டும். இந்துக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஒன்று அது. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே இதனை மதிக்காமல் அரசியல் கட்சியோ, அமைப்போ இதை எதிர்த்து பேசினால் அவர்கள் சட்டத்தை மதிக்காத ஒரு கும்பல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேளம்பாக்கத்தில் இந்த அரசு கட்டியுள்ள பேருந்து நிலையத்தில் கோவிலை இடிப்பதற்கு துணை போன போலீஸ்தான் இந்த திமுக அரசின் போலீஸ். திமுக அரசுதான் அந்த கோவிலை இடித்தது. அந்த கோவிலை இடிப்பதற்கு செக்யூரிட்டியாக போன போலீஸ் பெண்களை இந்து கோவிலுக்கு செல்ல அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? தமிழ்நாடு போலீஸ் டோட்டலி ஆன்ட்டி ஹிந்து'' என்றார்.