Skip to main content

“தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது” - எடப்பாடி பழனிசாமி!

Published on 04/08/2024 | Edited on 04/08/2024
Tamil Nadu has become a field Edappadi Palaniswami
கோப்புப்படம்

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில், “திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி எனத் தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாகக் கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. வாரந்தோறும் ராசி பலன்கள் போடுவது போலக் கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்?. எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்குச் செல்ல முடியும்?. எப்படி நம் மாநிலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்?. எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காகச் செய்துகொள்ளும் செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வராது. சீரான சட்டம் ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை என்பதை உணர்ந்து, அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தைச் சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்