சேலத்தில், விவசாயியிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட தாட்கோ பெண் மேலாளர், அலுவலக உதவியாளர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (42). விவசாயி. இவர், டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவித்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற, சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தாட்கோ அலுவலகம், குமாரிடம் நேர்காணல் நடத்தியது. அதன்பேரில் டிராக்டர் வாங்க 50 சதவீத மானியமாக 7.50 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக அவரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், கடனுதவிக்கான பணிகள் விரைவாக முடித்துக் கொடுக்கப்படும் என தாட்கோ மேலாளர் (பொறுப்பு) சாந்தி கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குமார், இதுகுறித்து சேலம் லஞ்சம் ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையின் வழிகாட்டுதலின்பேரில் குமார், தாட்கோ மேலாளரை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டபடியே பணம் கொடுக்கத் தயார் எனக்கூறியுள்ளார். அதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தாள்களைக் கொடுத்து அனுப்பினர்.
இந்தப் பணத்துடன் சென்ற குமார், தாட்கோ மேலாளர் சாந்தியிடம் கொடுத்தபோது, அதை அவர் அலுவலக உதவியாளர் சாந்தியிடம் (இவர் பெயரும் சாந்திதான்) கொடுக்கும்படி கூறினார். அதன்பேரில், லஞ்சப்பணத்தை உதவியாளர் சாந்தியிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாய்ந்து சென்று அலுவலக உதவியாளர் சாந்தியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாட்கோ மேலாளர் சாந்தியையும் கைது செய்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து தாட்கோ மேலாளரின் வீட்டில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
பிடிபட்ட தாட்கோ மேலாளர் சாந்தியின் கணவர், மலேசியா நாட்டு ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அவர் மலேசியாவுக்குச் சென்று பணியாற்றி வருவது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தாட்கோ மேலாளர் சாந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.