Skip to main content

பிடிபட்டது 'டி23' புலி... நிம்மதி பெருமூச்சுவிட்ட மசினகுடி!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

 Captured 'T23' tiger

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை 21வது நாளாக வனத்துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று (14.10.2021) இரவு மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதான வாகனத்தைச் சிலர் சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் புலி ஒன்று சாலையைக் கடப்பதைப் பார்த்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இரவு 10 மணியளவில் வனத்துறையினரின் மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகும் புலி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, மசினகுடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலி பதுங்கிய அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காலை சுமார் 2 மணிவரை இந்த தேடுதல் வேட்டை நடந்தும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தேடுதல் வேட்டை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 

udanpirape

 

இந்நிலையில், இன்று காலை மீண்டும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் துவங்கினர். அப்போது மீண்டும் புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்தியதைக் கண்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் குழு, புலியைத் தொடர்ந்து கண்காணித்தனர். இதனால் மசினகுடி - தெப்பக்காடு இடையிலான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 'டி23' புலிக்கு மீண்டும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையினர் 21 நாள் போராட்டத்திற்குப் பின் புலியைப் பிடித்துள்ளனர்.   

 

 Captured 'T23' tiger

 

புலியைப் பிடிக்கும் பணியில் 80க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், 5 ட்ரான் கேமராக்கள், 50க்கும் மேற்பட்ட இமேஜ் ட்ராப் தானியங்கி கேமராக்கள், அதிரடி படையினர், இரண்டு கும்கி யானைகள், சிப்பிப்பாறை நாய்கள், மோப்ப நாய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புலியைக் கொல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து புலியைக் கொல்லக்கூடாது என வழக்கு கூட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், புலியைக் கொல்லாமல் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது மசினகுடி.

 

இப்புலி இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்