!["The suspended senior citizen's allowance was again received by the Chief Minister"- Minister I.Periyaswamy's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/ivgoNOZM6EIe7925mu4Yq61CLG3GR0kvJjrKJ_EFpyE/1664733932/sites/default/files/inline-images/n21290.jpg)
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இன்று செட்டியபட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''கிராமங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது கிராம சபைக் கூட்டங்கள்தான். கிராமத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் கிராம வளர்ச்சிக்கு உதவுவதால் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சமுதாயக்கூடம், பேருந்து வசதி, திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்துள்ளீர்கள். விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு கடந்த 10 வருடங்களாக ஆத்தூர் தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித் தொகை சுமார் 5500 பேருக்கு மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இங்குள்ள துணை சுகாதார நிலையத்திற்கு உடனடியாக மருத்துவ வசதியும், கிளை கால்நடை மருத்துவமனையும், கொண்டு வரப்படும். கிராம சபைக் கூட்டத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.