கோவையைச் சேர்ந்த பேராசிரியரும், பிரபல கவிஞருமான சுசீலா மூர்த்தியின் ‘பெருங்காட்டு நேசம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, கோவை.சிவானந்தா காலனி, எஸ்.வி.டி. அரங்கத்தில் வெகுசிறப்பாய் நடந்தது. ’நண்பர்கள் பதிப்பகம்’ இந்த நூலை சிறப்பாகத் தயாரித்திருந்தது. ’வாங்க பேசலாம்’ குழுமத் தலைவர் ரவி தங்கராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்க, நூலாசிரியரின் துணைவர் என்.எஸ்.மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
’பெருங்காட்டு நேசம்’ கவிதை நூலை கவிஞர் யவனிகா ஸ்ரீராம் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். நூலாசிரியரின் தந்தையார் ஜே.சுந்தர்ராஜன் நூலின் முதற்படியைப் பெற்றுக் கொண்டு நூலாசிரியரைப் பெருமிதத்தோடு வாழ்த்தினார். வாழ்த்துரையாளர்கள் வரிசையில் வந்த கவிஞர் ஐயப்ப மாதவன், இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரும் பரதக் கலைஞருமான பத்மினி பிரகாஷ் ஆகியோர் கவிதை நூலின் சிறப்பை எடுத்துச் சொல்லி நூலாசிரியரை வாழ்த்தினர்.
சுசீலா மூர்த்தியின் புதுமை மிளிரும் கவிதை நடையையும், அவரது மிருதுவான காதல் கவிதைகளின் வெளிப்பாட்டு உத்தியையும், அவரது சுவை மிகுந்த இயற்கை வர்ணனைகளையும், வாழ்த்த வந்த அனைவரும் பாராட்டினர்.
விழாவை சித்தா புதூர் யோகா மையத் தலைவர் ஜெயலட்சுமி கவித்துவமாகத் தொகுத்து வழங்க, சாந்தி சாதனா நன்றியுரை வழங்கினார். நிறைவாக நூலாசிரியர் கவிஞர் சுசீலா மூர்த்தி, தனது கவிதை அனுபவங்களை தன் ஏற்புரையில் நெகிழ்வும் மகிழ்வுமாய்ப் பகிர்ந்துகொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் படைப்பாளர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இந்த விழா, கோவை நகருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாக இனிதே அரங்கேறியது.
-சூர்யா