வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை மாட்டு சந்தை திடலில், பகத்சிங் சமுதாய கூடம் என்கிற பெயரில் ஒரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி 5 ஆண்டுகளை கடந்துள்ளது. ஆனாலும் இன்னும் அந்த கட்டிடம் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவில்லை.
இதுப்பற்றி பலமுறை அதிகாரிகளிடம் சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை அந்த கட்டிடத்தை திறந்து வைக்கவில்லை. இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும்மென கடந்த 22.10.2019அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி இணைந்து பழைய பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனாலும் இதுவரை அதை திறப்பதற்கான நடவடிக்கை இல்லை எனக்கூறப்படுகிறது.
தொழிலாளர்கள், ஏழை மக்கள், கூலி தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள இந்த சமுதாய கூடத்தை திறந்தால் பொதுமக்களுக்கு பல வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
இந்நிலையில் திறக்கப்படாமல் உள்ள அந்த சமுதாய கூடத்தை போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் நவம்பர் 5ந்தேதி சென்று பார்வையிட்டுள்ளனர். அந்த கட்டிடத்துக்குள், முதல் மாடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நூற்றுக்கணக்கிலும், அதோடு சில பார்சல்களும் இருப்பதை கண்டுள்ளனர். சமுதாய கூடம் குப்பை குடோனாக இருப்பதை கண்டுள்ளனர். மேலும் திறக்கப்படாத இந்த சமுதாய கூடத்தில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவை கண்டுள்ளனர்.
இந்த சமுதாய கூடத்தை உடனடியாக திறக்காவிட்டால் குடியாத்தம் பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி விரைவில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என போராட்ட குழுவில் உள்ள குடியரசு கட்சியின் நிர்வாகி தலித்குமார் தலைமையில் முடிவெடுத்துள்ளனர்.