வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என இங்கு வந்து செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி, ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
இத்தகைய சூழலில், இப்படி பல்வேறு காரணங்களால் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள், பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். அவ்வாறு வருகின்ற இரு சக்கர வாகனங்களைச் சிலர் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிறுத்துவார்கள். ஆனால், அப்படி நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதனால், அலுவலகத்திற்கு வந்த ஏராளமானவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும், இது குறித்துப் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பேரில், அந்த புகார்களை எடுத்துக்கொண்ட போலீசார் இதுகுறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், வாகனங்கள் திருடப்படுவது குறைந்தபாடில்லை. இதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவரின் டூவீலரும் திருடுபோயுள்ளது.
இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் மெர்லின் ஜோதிகா. பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்த இவர், அலுவலகத்திற்கு எப்போதும் தனது ஸ்கூட்டியில் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்கு வந்த மெர்லின் ஜோதிகா தனது ஸ்கூட்டியை ‘பி’ பிளாக் கட்டடத்தின் முன்பு நிறுத்தி இருந்தார்.
அதன்பிறகு, மெர்லின் ஜோதிகா பணி முடிந்து வெளியே வந்து பார்த்தபோது அவருடைய ஸ்கூட்டி காணாமல் போயிருந்தது. இதனால் பதற்றமடைந்த மெர்லின், தனது வண்டியை அந்த வளாகம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், எங்கு தேடியும் அவருடைய வாகனம் கிடைக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தொடர் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.