Skip to main content

20 கிராமத்திற்கும் ஒரே பேருந்து; பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Students are suffering as only one bus is plying to all 20 villages Cuddalore

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இருந்து தொழுதூர், கிழக்கல்பூண்டு, கண்டமத்தான், சிறுபாக்கம், வடபாதி, ஓரங்கூர், அரசங்குடி வழியாக நைனார்பாளையம், சின்னசேலம் வரை ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே பேருந்து என்பதால் பணிக்குச் செல்வோர், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் எனப் பல வேலைகளுக்குச் செல்லும் அனைத்து கிராம மக்களும் இந்தப் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கின்றனர். அதனால் பேருந்தில் அதிகளவில் கூட்டம் இருக்கும். இதில் சிலர் பேருந்தில் ஏற இடமில்லாமல் படிக்கட்டிலேயே தொங்கிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. 

 

அந்த வகையில், இன்று அந்த பேருந்தில் அதிகளவில் கூட்டம் இருந்ததால், பலரும் பேருந்து படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்தனர். இதனைக் கண்டு பதற்றமடைந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை இயக்காமல் 15 நிமிடம் அரசங்குடியிலேயே நிறுத்தியுள்ளார். இதனால் காலையில் பணிக்குச் செல்வோர், மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 

 

காலை, மாலை, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும்போதும் மற்றும் திரும்பி வரும்போதும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அப்போதுதான் ஆபத்து இல்லாமல் பயணம் செய்ய முடியும் என கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்