தமிழகத்தில் ஊழல் என்பது தீர்க்க முடியாத நோயாக மாறியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்தார். காமராஜர் பிறந்த நாளையொட்டி சேலத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை 15, 2018) மாலை அணிவித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
’’தேசியத் தலைவர்களுள் ஒருவரான காமராஜர், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ஊழலற்ற, நேர்மையான அரசை வழிநடத்தினார். பிரதமர் மோடி, கர்மவீரர் காமராஜரின் வழியில் பயணித்து வருகிறார். காமராஜரின் பிறந்த நாளில், அவரின் தேசியப் பாதையை பின்பற்றி, நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
யுஜிசி அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது மக்கள் நன்மையை முன்னிறுத்தியே செயல்படுத்தப்படும். மக்கள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும். கல்வியைப் பொருத்தவரை, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு அணுகுமுறைகள் பின்பற்றப்படுகிறது. வரும் காலங்களில், அனைத்து மாணவர்களும் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி முறையை ஏற்படுத்துவது அவசியமானதாக உள்ளது.
எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் என்பது, நாட்டின் வளர்ச்சிக்காகவே கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசை பொருத்தவரை, எந்த ஒரு சாலைத்திட்டமும் அரசு புறம்போக்கு நிலம், தரிசு நிலங்களின் வழியாக அமைக்கவே விரும்புகிறது. தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்தில் விவசாய நிலத்தின் வழியாக சாலை அமைக்கப்படும்போது, அதற்கு வளர்ச்சி என்ற அடிப்படையில் விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் எட்டு வழிச்சாலை மட்டுமின்றி எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த முயன்றாலும் சில பயங்கரவாத இயக்கங்கள் தேவையில்லாத எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. இதைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் விவசாயிகளை கேடயமாக பயன்படுத்தி, பயங்கரவாத இயக்கங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. தமிழகத்திற்கான முன்னேற்றம் என்று வரும்போது அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசாங்கம் இருக்க வேண்டும். இங்கு ஊழல் என்பது தீர்க்க முடியாத நோயாக மாறியுள்ளது. ’’