நாமக்கல் அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைப்பதற்காக தன் உயிரையே பள்ளி மாணவன் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி மேகலா. இவர்களுடைய மகன் தருண் (17). நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ராஜபாளையம் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
சிறுவனின் தாய், தந்தை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாயார், அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். தருண், தந்தையுடன் வசித்து வந்தார். பெற்றோர் இருவரும் பிரிந்து வாழ்வதைக் கண்டு அடிக்கடி தனது நண்பர்களுடன் சிறுவன் புலம்பி வந்துள்ளார். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பெற்றோரின் நிலையை எண்ணி தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தருண், திங்கள்கிழமை (மே 16) இரவு வழக்கம்போல் தனது அறைக்குள் தூங்கச் சென்றார். மறுநாள் காலை விடிந்த பிறகு நீண்ட நேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை கதவை திறக்க முயன்றார். உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கே தருண், தூக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேந்தமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை நடத்தினர். அந்த அறையில் இருந்து தருண் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில், ''என்னுடைய சாவிலாவது தாய், தந்தை நீங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும். அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் எங்கும் செல்லவில்லை. வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்'' என உருக்கமாக எழுதி இருந்தான்.
பிரிந்த பெற்றோர் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.