நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இன்று ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'அதிமுகவை பொறுத்தவரை எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமைக்கப்படுகிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் விஷமத்தனமான பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும். தேர்தல் தேதி அறிவிக்கும் காலகட்டத்தில் எங்களுடைய கூட்டணி சிறப்பாக அமையும். அப்பொழுது அனைவரையும் அழைத்து தெரிவிப்போம்.
அதிமுகவை பொறுத்தவரைக்கும் கழக வேட்பாளர்களும் சரி, கூட்டணி வேட்பாளர்களும் சரி மக்களுக்காக உழைக்கின்றவர்கள். தமிழ்நாட்டுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, தமிழ்நாட்டினுடைய உரிமைகளைக் காக்க, மீட்டெடுக்க, தமிழ்நாடு வளர்ச்சி பெற, தமிழ்நாடு ஏற்றம் பெற எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்று, எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாடுபடுவார்கள்.
கடந்த 2014-19 வரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த 37 பேரும் மக்களுக்காக உழைத்தார்கள். மக்களுடைய பிரச்சனையை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தார்கள். உதாரணத்திற்கு காவிரி நதிநீர் பிரச்சனை வந்தபோது உச்ச நீதிமன்றத்தின் மூலமாக சட்டப் போராட்டம் நடத்தி அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றது. அந்த தீர்ப்பை அமல்படுத்த காலதாமதம் செய்த காரணத்தால் மத்திய அரசை எதிர்த்து அழுத்தம் கொடுக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரும் தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்பட முடியாத அளவிற்கு, ஒத்தி வைக்கும் அளவிற்கு செயல்பட்டனர். அதிமுக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கியுள்ளோம்'' என்றார்.