தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் இரண்டாம் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.