துணைவேந்தர் தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான ஆளுநரின் அறிவுறுத்தல்கள் உள்நோக்கம் கொண்டது என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான ஆளுநரின் அறிவுறுத்தல்களில் உள்நோக்கம் உள்ளது. துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து கல்விப் பணியாற்ற வழி விட வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் என்பது தொடர்ச்சியாக நிரப்பப்படாமல் மீண்டும் மீண்டும் தமிழக ஆளுநரால் முட்டுக்கட்டை போடப்பட்டு, மாணவர்களின் கல்வி என்பது பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் நிர்வாகக் குளறுபடி, மறுபக்கம் ஆளுநர் இனியாவது இதனை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளிப்பதற்கு ஆளுநர் முன்னேவர வேண்டும். தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இந்த விவகாரத்தில் உயர்கல்வி துறையில் அவர் அரசியல் செய்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மொழி உரிமை, கல்வி உரிமை போராட்டங்களை கண்ட தமிழ்நாட்டில் ஆளுநர் தனது சாய அரசியலை கைவிட வேண்டும்' என பதில் கொடுத்துள்ளார்.