சிவகாசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,
“என்னைப்பற்றி சிறியதாக ஒரு சின்ன செய்தி கிடைத்தால் கூட அதை ஊதிப் பெரிதாக்கி வெளியிடுவதை சில சமூக ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. டிடிவி தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு. அவர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து தனிச்சின்னம் வாங்கியுள்ளார். அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைய வாய்ப்பே கிடையாது. அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையும் என்று வரும் செய்திகள் அனைத்தும் தவறானது. தமிழகத்தில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி இருக்கும். வரும் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனியாக தேர்தலைச் சந்தித்தால் அதிமுக அமோக வெற்றி பெறும்.
யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சி நடத்தி வருகின்றார். பிக்பாஸ் போன்று கட்சியை நடத்தி வருகிறார். நடிகர் கமலஹாசன் கொள்கையைப் பற்றி கூறினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்ற போது தலைக்கு நேராக பலூன் தொங்கிக் கொண்டிருந்தது. கேமரா மூலம் படம் எடுப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகத்தான் அதைத் தட்டிவிட்டேன். அதை நக்கல் செய்து ஸ்டாலின் பேசி வருகிறார். பலூன் உடைப்பது ஒன்றும் தவறு கிடையாது. திமுகவினர் போன்று யாரையாவது பல்லை உடைத்தால்தான் தப்பு. திமுகவினர் பல்லை உடைக்கும் வேலையைத்தான் பார்த்து வருகின்றனர். அதிமுகவில் வேகமாகப் பேசும் தலைவர்களை இது போன்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்” என்றார்.