![jh](http://image.nakkheeran.in/cdn/farfuture/RRPSqMtVjHSPUsdVItkLga4yE9uSqf8nI2WZefGjeaY/1653235237/sites/default/files/inline-images/jkl%3B_8.jpg)
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் கடந்த 14ந் தேதி இரவு பாறை சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு கற்களை லாரிகளில் ஏற்றி கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதில் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், நாட்டார் குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாறைகளுக்குள் சிக்கி உள்ள மேலும் மற்ற நபர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில் அடுத்தாத மீட்கப்பட்ட இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் 6வது நபரின் உடலை கண்டறியும் பணி ஒருவாரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று அவரின் உடல் இருக்கும் இடத்தை மீட்பு படையினர் கண்டறிந்தனர். அவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியாத நிலையில் நீண்ட முயற்சிக்கு பிறகு உயிரிழந்த அவரின் உடலை மீட்பு படையினர் கைப்பற்றினர். இதன் மூலம் எட்டு நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவடைந்துள்ளது.