Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை மூடல்! தமிழக அரசின் அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது! - தொல் திருமாவளவன்

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து தமிழக அரசின் அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை ஒன்றை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன் ஹஅடிப்படையில் அந்த ஆலைக்கு பூட்டுப் போட்டு சீல்வைக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. 

 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23.5.2018 அன்று அறிவிப்பு செய்திருந்தது. அந்த உத்தரவுக்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் வழங்குவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர ஆலையை மூடுவதற்கு வேறு எந்த விரிவான காரணமும் அரசாணையில் இல்லை. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாகத் தடையாணை பெற்றுவிடும். அதற்கு வழி வகுப்பதாகவே இந்த அரசாணை உள்ளது.
 

Sterlite plant closure! The Government of Tamil Nadu raises suspicion! - Thirumavalavan


 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பிலும் கூட விரிவான காரணங்களையோ ஆலையை மூடுவதற்கான ஆதாரங்களையோ அது அளிக்கவில்லை. இந்நிலையில் அதை அப்படியே ஏற்று ஒப்புதல் அளித்திருப்பது தமிழக அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களைக் கொண்ட அரசாணையை அது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது ஏன்? 
 

தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம்போல ஸ்டெர்லைட்  ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் என்றே கருதவேண்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்