
என்னை பற்றி மீம்ஸ் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வைகோவின் மைத்துனர் சரவண சுரேஷ் இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதையடுத்து தீயை அணைத்து, அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கிருந்து பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்துள்ள அவரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சென்று சரவண சுரேஷை நேரில் சந்தித்த வைகோ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
என் மருமகன் தீக்குளிப்பில் உடல் முழுவதும் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். பிழைக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியலாக என் கூடவே இருப்பவர் சரவண சுரேஷ். கடந்த 30ம் தேதி என் வீட்டிற்கு வந்தவர், ஸ்டெர்லைட்டில் என் மகனுக்கு 3 சதவீத பங்கு வாங்கிவிட்டதாக சீமான் கட்சியை சேர்ந்த சிலர் போட்ட பதிவை பார்த்து மிகுந்த வருத்தப்பட்டார். நான் சமாதானம் கூறி அனுப்பி வைத்தேன். அவனுக்கு குடும்பத்தில் வேறு கவலைகள் இல்லை. வசதியானவன் தான், பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். வேறு எதுவும் இல்லை.
தொண்டர்கள் தீக்குளிக்கக் கூடாது என்று நேற்று மாலை கூட்டத்தில் கூறினேன். அதைக்கூட கேட்டுருப்பான். எனக்கு வேதனையாக இருப்பது எல்லாம் என்னுடைய அரசியலால் வாழ்க்கையில் என் மனைவி, சகோதரர் என என் குடும்பமே நொறுங்கி போயுள்ளது.

தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள், தலைவர்கள் யாரும் தீக்குளிப்பது இல்லை. தலைவர்கள் குடும்பத்தில் யாரும் தீக்குளிப்பது இல்லை. தொண்டர்களை தான் தீக்குளிக்க விடுகிறார்கள் என்ற விமர்சனம் இருந்தது. நல்லவேளை இனி என்னை யாரும் அப்படி விமர்சனம் செய்ய முடியாது என் குடும்பத்திலும் ஒருவர் தீக்குளித்த உயிரிழக்கிறார்.
மீம்ஸ் போடுபவர்கள் கொஞ்சம் யோசித்து போடுங்கள். நான் தாங்கிக்கொள்வேன், என் குடும்பத்தில் உள்ளவர்கள் தாங்கி கொள்ள வேண்டுமல்லவா? நொறுங்கிப் போயுள்ளனர் என் குடும்பத்தினர். ஸ்டெர்லைட்டில் நான் என் மகனுக்கு பங்கு வாங்கிவிட்டேன் என சீமான் ஆட்கள் போட்டதை பார்த்து என் குடும்பத்தினர் மனமுடைந்து போயுள்ளனர்.
தமிழக இளைஞர்களை கையெடுத்து கும்பிடுகிறேன். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் தீக்குளிக்காதீர்கள். வாழ்ந்து போராடுவோம் என அவர் கூறினார்.