தமிழக அரசாலும், அதிகாரிகளாலும் தொடர்நது புறக்கணிக்கப்படும் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் மனுநீதி நாளை புறக்கணிப்போம் என்று 15 கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் உள்ள அம்பலவாணனேந்தல் கிராமம். நான் அ.தி.மு. க தான் என்று வெளிப்படையாக பேசினாலும் தினகரன் அணியை சேர்ந்தவர் என்று அ.தி.மு.கவால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதியின் சொந்த ஊரான நெற்குப்பை பஞ்சாயத்தில் உள்ள கிராமம். அதனாலையே தொடர்ந்து அந்த தொகுதி முழுவதும் புறக்கணிக்கப்படுவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்தநிலையில் தான் செவ்வாய் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி கலந்துகொள்ளும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் அந்த கிராமத்தில் நடந்த அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அம்லவாணனேந்தல் மற்றும் சுற்றியுள்ள 15 கிராம மக்கள் தொடர்ந்து எங்கள் கிராமங்களை புறக்கணிக்கும் அரசாங்கத்திற்கு எதிராகவும், அதிகாரிகளுக்கு எதிராகவும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை புறக்கணிப்போம். மீறி முகாம் நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பதாகை வைத்துவிட்டதுடன் இன்று அடையாள ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார்கள்.
இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது.. அம்பலவாணனேந்தல் கிராமத்தில் சுமார் 30 வருடங்களாக தாய் சேய் நலவிடுதி செயல்பட்டு வந்தது. அதன் பிறகு எங்க தொகுதி எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி சட்டமன்றத்தில் 30 க்கும் கிராமங்களில் சுகாதார நிலையம் இல்லை அதனால அம்பலவானேந்தலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ 110 விதியின் கீழ் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அறிவித்தார். அதேபோல் கறம்பக்குடி குலந்திராண்பட்டு கிராமத்திற்கும் அறிவித்தார்கள். உடனே ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் பணிகளை தொடங்க வேண்டும் தற்காலிக இடம், மற்றும் தளவாடி பொருட்கள் வேண்டும் என்று கேட்டதால் தற்காலிக கட்டிடம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர் அறை, ஊசி போடும் இடம், மருந்துகள் வைக்க என்று அனைத்து அறைகளுக்கும் ரூ. 70 ஆயிரத்திற்கு உபகரணங்கள் வாங்கி வைத்தோம். நோயாளிகள் வந்தால் வெயிலில் நிற்க கூடாது என்பதற்காக செட் அமைத்தும் கொடுத்தாச்சு.
தொடர்ந்து கலைச்செல்வி என்ற செவிலியரும், ராபர்ட் திவான் என்ற மருத்துவரும் அடுத்தடுத்து நியமனம் செய்தார்கள். அடுத்து கட்டிடம் கட்ட ரூ. 60 லட்சம் நிதியும் ஒதுக்கினார்கள். இதில் எதுவுமே எங்க ஊருக்கு வரல. எங்க ஊருக்கு நியமிக்கப்பட்ட டாக்டரும், செவிலியரும் கோட்டைப்பட்டிணத்தில் வெலை செய்துவிட்டு எங்க ஊர் கணக்கில் சம்பளம் வாங்குறாங்க.
இது சம்மந்தமா பல முறை அதிகாரிகளிடம் கேட்டும் எந்த பலனும் இல்லை. காரணம் அ.தி.மு.க வுக்கு ஓட்டுப் போட்ட எங்கள் கிராமங்களை இந்த அரசும், அமைச்சரும், அதிகாரிகளும் புறக்கணிப்பதாக விபரம் அறிந்த அதிகாரிகளே சொல்றாங்க.
15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவில் ஏதாவது உடல்நலக்கோளாறு என்றால் 15 கி.மீ தூக்கிட்டு ஓடனும். இப்படி எங்கள் கிராம நலனை புறக்கணிக்கும் போது நாங்கள் ஏன் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு போகனும். புறக்கணிப்போம் என்று அறிவித்ததும் பேச்சுவார்த்தைக்கு அழைச்சு ஒரு நாள் கெடு வாங்கினாங்க இப்ப 3 நாள் முடிஞ்சும் எந்த பதிலும் இல்லை. அதனால் திட்டமிட்டபடியே புறக்கணிப்பு போராட்டம் தான் என்றனர்.
அமைச்சருக்கோ அரசுக்கோ பிடிக்காதவர் எங்க எம்.எல்.ஏ என்றால் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அதுக்காக தொகுதி மக்களை புறக்கணிப்பது நியாயமா என்கிறார்கள்.