ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாணையம் அனுமதி அளித்திருப்பதற்கு மக்கள் அதிகாரம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கடலூர்- மாவட்டம் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடையே கூறியதாவது:
’’டெல்லி தேசிய பசுமை தீர்ப்பானையம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவு வழங்கியுள்ளது. 3 வாரத்திற்குள் தமிழக அரசு அவர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும், மின்சாரம் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது இது மக்கள் அதிகாரம் எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக அரசு உத்தரவு போடும்போதே இது கண்துடைப்பு, அமைச்சரவையை கூட்டி தனி சட்டம் இயற்றினால்தான் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட முடியும் என அன்று முதல் வலியுறுத்தி வந்தோம்.
நாங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் எதிர்கட்சிகள், போராடும் இயக்கங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட இதனை வலியுறுத்தினார்கள். அ.தி.மு.க அமைச்சர்களும், முதல்வரும் நாங்கள் உலக நீதிமன்றத்தில் கூட வாதிடுவோம். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விடமாட்டோம் என அடித்து பேசினார்கள். இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் அரசாணையை அதிகார வரம்பை மீறி ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கூற வேண்டும்.
13 பேர் துப்பாக்கி சூடு படுகொலை நடந்த பிறகும், சுற்றுசூழல் பாதிக்கப்பட்ட பிறகும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்கள் நல திட்டத்திற்கு நாங்கள் 100 கோடி ரூபாயை செலவு செய்வோம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கூறியுள்ளது. அதனை ஏற்றுகொண்டு மக்களுக்கு நல்ல குடிநீர், மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 'எங்களால் சுற்றுசூழல் பாதிக்கப்படவில்லை. ஸ்டெர்லைட்டால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை' என கூறியுள்ளது. எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஸ்டெர்லைட் ஆலை எதற்காக 100 கோடி ரூபாயினை மக்களுக்காக செலவு செய்வோம் என கூற வேண்டும்.
ஏற்கனவே 2013 உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் இவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. 2013 லிருந்து 2018 வரை எந்தவித அனுமதியும் பெறாமல்தான் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது. லட்சகணக்கான காப்பர் ஸ்லாட்டையும், ஜிப்சம் போன்ற கழிவுகளையும் அகற்ற வில்லை. இவர்களால் காற்றுமாசு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை மூடியது. அப்படியிருந்தும் 100 நாட்கள் பல பேர் போராடி, 13 பேர் தூப்பாக்கிச்சூட்டில் பலியாகி, மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அந்த படுகொலையின் காரணமாகத்தான் ஸ்டெர்லைட் மூடப்பட்டது. ஆனால் இன்று ஏதோ தமிழக அரசுக்கும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கும், ஸ்டெர்லைட்டிற்கும் தனிப்பட்ட பிரச்சினை என்பது போல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுகியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசு மக்களுக்கு நல்லது என முடிவெடுக்கும் போது அதில் தலையிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலை எந்த உத்தரவையும் மதிக்கவில்லை. கழிவுகளை அகற்றவில்லை. இந்த ஆலை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தொடர் குற்றவாளி, தொடர் வன்முறையாளன். இந்த ஆலையால்தான் ஆர்சானிக் லெட் கழிவுகள் வருகிறது. வேறு எந்த ஆலையிலும் இதுபோன்ற கழிவுகள் வரவில்லை.
நாங்கள் தமிழக அரசு மீது கூறிய குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது. நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என முதல்வர் கூறியுள்ளார். ஆனால் மேல்முறையீடு செய்தாலும், உச்சநீதிமன்றம் தடைகொடுக்காவிட்டால் 3 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேண்டும்.
இன்று தூத்துக்குடியில் கிராம மக்கள் யாரும் வீதிகளில் கூடி பேசமுடியவில்லை. நாங்கள் வீட்டுக்கு வீடு கருப்புகொடி ஏற்றுவோம் என கருப்புதுணி வாங்க செல்லும் மக்கள் போலீசாரால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். வாட்சப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடு, தனிச்சட்டம் இயற்று என பதிவிட்டால் போலீசாரால் அச்சுறுத்தப்படுகிறார்கள். கூடங்குளம் அனு உலைக்கு எதிராக இடிந்த கரையில் மக்கள் பல முறைபோலீசாரின் அடக்கு முறையை எதிர்கொண்டார்களோ அதுபோல தூத்துக்குடி மக்கள் தமிழக போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயே காலணி படைபோல இன்று தமிழக போலீசார் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அனைத்து அடக்கு முறைகளையும் தூத்துக்குடி மக்கள் மீது ஏவி வருகிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழகமும் இதற்காக போராட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது. தனிச்சட்டம் இயற்றி நிரந்தரமாக மூட வேண்டும். மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டாம்.
எனவே வருகின்ற திங்கட்கிழமை( நாளை) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக்கோரியும், அந்நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெளியேற்றவும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். போராட்டத்தை அடக்க கூடாது. உடனடியாக அமைச்சரவையை கூட்டி, தனிச்சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ’’