![writer passed away chief minister mkstalin announced statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/yaWBnpTxIgrRIU639WLtjBopuHhoOqxx5REjwTQY35s/1621331930/sites/default/files/inline-images/MKSSS%20%281%29_6.jpg)
பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, கி. ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். கி.ரா. நினைவைப் போற்ற அவரது புகைப்படங்கள், படைப்புகளுடன் ஓர் அரங்கம் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.