![State President, Tamil Nadu Lorry Owners Association statement](http://image.nakkheeran.in/cdn/farfuture/SavRRM9qslvs3rXv1fGv0ndYXMTcRsmIuGbky-R-5bQ/1618164621/sites/default/files/inline-images/lorry11_1.jpg)
கனரக சரக்கு வாகனங்களில் பக்கவாட்டு பகுதிகளில் ஒளிரும் பட்டைகளை கட்டாயம் ஒட்ட வேண்டும் என்ற உத்தரவுக்கு லாரி அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 27- ஆம் தேதி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து ஆணையர் டிசம்பர் 23- ஆம் தேதி எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டது.
அப்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதால் லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யும்போதும், புதிய விதிகளை அமல்படுத்தும்போதும் அதன் சாதக, பாதகங்களை விவாதித்து முடிவெடுக்க 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், லாரிகளுக்கு ஆர்டிஓ அலுவலகங்களில் தகுதிச்சான்று பெறும்போது ஒளிரும் பட்டை ஒட்டுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த மார்ச் 31- ஆம் தேதி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
போக்குவரத்து ஆணையர், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, ஒருங்கிணைப்புக்குழுவில் விவாதிக்காமல் கடந்த மார்ச் 27- ஆம் தேதி, லாரிகளில் அனைத்து பக்கவாட்டு பகுதிகளிலும் ஒளிரும் பட்டைகளை ஒட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நடத்தை விதிகள் முடிந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்ற உடன், துறை அமைச்சர் முதல்வருடன் ஒருங்கிணைப்புக்குழுவை உடனடியாக கூட்டி கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறைகள் இல்லாத நிலையில் தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது.' இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.