ஹோமியோபதி மத்திய சபை’ மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை (27.6.2019) உரையாற்றினார்.
அவரது உரை விவரம்: ‘ஹோமியோபதி மத்திய சபை’ மசோதாவிற்கு எமது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் மிகக்குறைவாகவே உள்ளது. ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மாற்று மருத்துவத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பொதுவாக மாற்று மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு அரசு முயற்சிகளை எடுப்பதில்லை. அதனால் மக்கள் வழக்கமாக அலோபதி மருத்துவத்தையே நம்பியுள்ளனர்.
ஹோமியோபதி மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். ஹோமியோபதி மருத்துவத்தை படித்துவிட்டு வேலை வாய்ப்பின்றி இருக்கும் பலரை நான் தமிழ்நாட்டில் காண்கிறேன். ஹோமியோபதி மருத்துவத்தை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி." என மசோதாவை ஆதரித்து உரையாற்றினார்.