கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம், திருமுட்டம் உள்ளிட்ட வட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பா சாகுபடி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருவதால் விற்பனை கூடத்திற்கு தினந்தோறும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் வந்து கொண்டிருக்கின்றன. மூட்டைகளின் வரத்து அதிகமாக இருப்பதால் வேளாண் விற்பனை கூடத்தில் மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான குடோன் வசதி இல்லை. அதனால் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள திறந்தவெளி விளை நிலத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பனி கால இரவுகளில் கூட விவசாயிகள் தங்குவதற்கு சரியான இட வசதி இல்லை. அத்துடன் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாததால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜந்து நாட்களாக காத்துக்கிடந்த விவசாயிகளின் நெல் மூட்டைகளை எடைபோட்டு விற்பனை விலையை அறிவித்த போது , விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஒரு மூட்டை நெல் நேற்று வரை 1500 ரூபாய்க்கு விலை போனதாகவும், தற்போது 1200 ரூபாய்க்கு வியாபாரிகள் விலை நிர்ணயிப்பதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விருத்தாசலம் கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டும் விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. மேலும் உள்ளூர் வியாபாரிகளின் கமிஷனுக்காக விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விலை குறைப்பதும், அதனை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் செயல்படுவதால், தங்களுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை என்றும், கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் கூறி சாலையில் அமர்ந்து இருந்தனர்.
இதேபோல் பழைய வேளாண் விற்பனை கூடத்தில் கடந்த நான்கு நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். அதனை கண்டித்து நேற்று இரவு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம் - கடலூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அனிவகுத்து நின்றன.
தமிழக அரசு அறிவித்த விலை கொடுக்காமல், விவசாயிகளை அழிக்க நினைக்கும் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் முறைகேடுகளால், விவசாயம் செய்யாமல் வேறு தொழில் செய்து பிழித்துகொள்ளாலாம் என்று பெண்கள் கதறுகின்றனர்.
தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் விவசாயம் செய்வது விட்டு, கூலி வேலைக்கு போக வேண்டியது தான் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். பின்னர் காவல்துறையினர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு உரிய விலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.