பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தகவல் வெளியான நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராமன் எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (24.12.2019) இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் ராமன். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், ராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையுலகின் கதாநாயகனாக திகழ்ந்து மக்கள் மனதைக் கவர்ந்த ராமனின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. ரசிகர்களை மீளா அதிர்ச்சியில் ஆழ்த்திய ராமனின் மரணம் இசை உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என அவர் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.