21-ஆவது நெய்வேலி புத்தக கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான புத்தகங்களின் காட்சியை ஆர்வமுடன் மக்கள் பார்த்து ரசித்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் நடத்தும் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சியான நெய்வேலி புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. 21-ஆவது நெய்வேலி புத்தக கண்காட்சியை நேற்று மாலை என்.எல்.சி தலைவர் சரத்குமார் ஆச்சாரியா தலைமையில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் லிக்னைட் ஹாலில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
"20 சதவிதம் தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளனர். 'புத்தகம் ஒவ்வொருவருக்கும் நல்ல நண்பன்' என்றார் மகாத்மா காந்தி. எல்லோரும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும், அப்போது தான் ஊழல் இல்லாது போகும். நல்ல புத்தங்கள் நல்ல வெற்றியாளர்களையும், நல்ல மனிதர்களையும் உருவாக்கி நல்ல சமுதாயத்தை உருவாக்க காரணமாக அமையும்" என்றார். மேலும் என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதை குறைத்து மரபுசாரா இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சோலார், கற்றாலை, மின்சாரம் போன்றவற்றை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். முன்னதாக பள்ளி மாணவர்களின் 'தூய்மை இந்தியா' திட்ட பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் (08.7.18 வரை) நடைபெறும். இதில் 150 பதிப்பகங்களில் இருந்து 160 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி, பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், கவிதைகள், அரசியல் உள்ளிட்ட அனைத்து விதமான புத்தகங்களும், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடை எண் 119. 120 ஆகியவற்றில் நக்கீரன் பதிப்பகம் ஸ்டால்கள் உள்ளன. அவற்றில் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள அனைத்து வகையான நூல்களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு தேவையான குறுந்தகடுகள், மென்பொருள்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினம் உள்ளிட்ட பல விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கண்காட்சி வளாகத்தில் சிறுவர்களுக்காக உடனடி திறனறிவு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. லிக்னைட் ஹாலில் நடைபெறும் விழாவில் புத்தகங்கள் வெளியீடு, எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு பாராட்டு, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு, ஆவணபப்டங்கள்- குறும்படங்கள் திரையிடல், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கல்வியில் பின்தங்கிய கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள இந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவுப்பொக்கிசம் எங்கிருந்தாலும் தேடியெடுக்கும் தேடல் உள்ளவர்கள் இருக்கும் வரை புத்தகங்களுக்கான வரவேற்பு புத்துணர்ச்சியளிக்கும் என்பதை மறுக்க இயலாது.