Skip to main content

"தள்ளிவிட்டுட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள இருந்தேன்" - சதீஷ் வாக்குமூலம்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

student father passed away

 

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கை போன்றே சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளார். அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளார்.

 

அப்பொழுது சென்னை கடற்கரை நோக்கிச்செல்லும் மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர் சதீஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சதீஸை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சதீஷிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களாக சத்யா பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்தேன். அவரை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள பரங்கிமலை ரயில் நிலையம் வந்தேன் என்றும் பயணிகளின் அலறல் சத்தத்தால் அங்கிருந்து தப்பி விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும்  காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்