![speaker appavu press meet online rummy](http://image.nakkheeran.in/cdn/farfuture/AbHt8qCV_Lr8TNrYVwjR7vdGG6tbNFDw_HTGnRZT26I/1678435149/sites/default/files/inline-images/th-6_186.jpg)
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்காலத் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆறு மாத கால இடைவேளையில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதங்கள் 11 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கூடுதலாக விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் அதில் இது தொடர்பாக சட்டம் இயற்ற சட்டமன்றத்திற்கு தகுதி இல்லையென்றும் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்ற சட்டமன்றத்திற்கு முழு உரிமையும் உண்டு என இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆளுநர் சட்டமன்றத்திற்கு தகுதி இல்லையென்று கூறியிருக்கிறார். அந்த வார்தையை அவர் தவிர்த்திருக்கலாம். யார் சொல்லி அதனை போட்டார் என்று தெரியவில்லை. சரியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம் என்பதே எனது கருத்து. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஓப்புதல் அளிக்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார். அவசர சட்டத்திற்கும், சட்ட மசோதாவுக்கும் வித்தியாசமில்லை. எந்த சட்டத்தை வைத்து சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார் என்று தெரியவில்லை. ஒப்புதல் அளிக்க மறுக்க ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது என தெரியவில்லை. மீண்டும் சட்ட மசோதவை சட்டமன்றத்தில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்போம்” என்றார்.