கோவை மாவட்டம் குனியமுத்தூருக்கு அருகே அமைந்துள்ளது சுகுணாபுரம் ஊராட்சி. இந்த பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த கோயிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
மேலும், இந்த திருவிழாவில் சுகுணாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அதன்பேரில், தனது சொந்த ஊர் திருவிழாவில் கலந்துகொண்ட எஸ்.பி.வேலுமணி, சில அதிமுக நிர்வாகிகளுடன் அங்கு வந்தடைந்தார்.
இந்நிலையில், மாரியம்மன் கோயிலின் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அருவி ஒயிலாட்ட குழுவினரின் மாபெரும் ஒயிலாட்ட நிகழ்வு திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், கோவை பகுதியில் நடைபெறும் எந்த ஒரு கோயில் திருவிழாவிற்கும் நேரில் செல்லும் எஸ்.பி.வேலுமணி அங்கு நடைபெறும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
அந்த வகையில், மாரியம்மன் கோயிலில் நடந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் திடீரென இறங்கிய வேலுமணி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நடனம் ஆடி அசத்தினார். மேலும், கோவில் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவரும் அமைச்சரின் நடனத்தை கண்டு ரசித்தனர். இதில் உற்சாகமடைந்த அதிமுகவினர் சிலர் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், எஸ்.பி.வேலுமணி இதேபோல் ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவரது சொந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் வேலுமணி ஒயிலாட்டம் ஆடும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.