நேற்று (15.07.2019) திருச்சியில், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய கோட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே தனியார் மயமாவது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
அதன்பின் பேசிய ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம், இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்து ரயில்வே துறையை தனியார் மயமாக்க தீவிர முயற்சிகள் செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 13 இலட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் இந்த 13 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட்டுகளின் விலை 26 சதவீதம் உயரும் அபாயமும் உள்ளது.
இந்த முயற்சியை தடுக்கும் விதமாக தொடர்ந்து பல போராட்டங்கள் நடக்கும். அதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஒருமணிநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் இதில் 13 இலட்சம் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அந்த ஒருமணிநேரம் ரயில்வேயில் எந்தவிதமான பணிகளும் நடைபெறாது. இந்தத்தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதேபோல் புதிய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு ரத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.