''நீரின்றி அமையாது உலகு'' அந்த நீரை பாதுகாக்க 20 வருடங்களுக்கு முன்புவரை விவசாயிகள் தாங்களே நீர்நிலைகளை சீரமைத்துக் கொண்டனர். அதன்பிறகு மழை பொய்த்ததால் சீரமைப்பும் குறைந்தது. அதன்பிறகு அரசு குளங்களை சீரமைப்பதை நினைக்கவே இல்லை. இந்தநிலையில்தான் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதன் பிறகும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால் இனியும் தண்ணீரின்றி தவிக்கும் நிலைவரும் என்பதை உணர்ந்த இளைஞர்கள் தாங்கள் சம்பாதித்து வந்த வேலைகளை உதறி தள்ளிவிட்டு தான் பிறந்து வளர்ந்த பூமியை வளமாக்க சொந்த கிராமங்களுக்கு வந்தனர்.
தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் கடந்த ஆண்டு உருவாள உயிர்துளி அமைப்பின் மூலம் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டில் 18 கி.மீ வாய்க்கால்கள் உள்பட சீரமைக்கப்பட்ட இரு குளங்களால் தண்ணீர் நிறைந்து 300 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 60 அடிக்கு உயர்ந்தது. இதைப் பார்த்த சுற்றுவட்டார 4 தாலுகா கடைமடை பாசன கிராம இளைஞர்கள், விவசாயிகள் இணைந்து கைஃபா என்ற அமைப்பை தொடங்கினார்கள்.
இந்த அமைப்பை தொடங்க வெளிநாடுகளில், வெளியூர்களில் லட்சம் லட்சமாக சம்பாதித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சம்பளம் பெரிதில்லை என் சொந்த பூமியில் தண்ணீரை கொண்டு வந்து குளிர வைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டு வந்தனர். பேராவூரணியில் 5500 ஏக்கர் பாசனத்திற்கு உள்ள 550 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய குளம், அதற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் பல வருடங்களாக புதர் மண்டி மண் சரிந்து கிடப்பதை பார்த்து முதலில் அந்தப் பணியை தொடங்கினார்கள். பெரிய பணி செய்து முடிக்க முடியுமா என்ற நினைவுகளோடு பூமி பூஜை போட்டு முடித்த அடுத்த நிமிடம் அவர்களிடம் ரூ. ஒரு லட்சத்தை பணம் கொடுத்தார் வெளிநாட்டில் வசிக்கும் அந்தப் பகுதி இளைஞர். அந்த பணம் கைஃபா குழுவினரை நம்பிக்கை ஏற்பட செய்தது.
அடுத்தடுத்து இளைஞர்களின் பணியை பார்த்து கொடையாளர்கள் நிதியை கொடுத்தனர். கிராம மக்கள் திருவிழாவுக்கு வசூலிப்பது போல வீட்டுக்கு வீடு வசூல் செய்து குளம் தூர்வார பணம் கொடுத்தனர். பள்ளி மாணவன் உண்டியல் சேமிப்பை கொடுத்தான். திருமண தம்பதி மாலையும் கழுத்துமாக வந்து நிதி வழங்கினார்கள். 8 மாத கர்ப்பணி உதவினார். இப்படி கஜா புயல் பாதிப்பு இருந்தாலும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.
இளைஞர்கள் இப்படி ஒரு பணியை செய்து வருகிறார்கள் என்பதை அறிந்து உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நேரில் வந்து இளைஞர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் வெற்றிச்செல்வன், சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ் என்று பலரும் வந்து பார்த்து பாராட்டியதுடன் அவர்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.
கரையை பலப்படுத்தி மண் அறிப்பை தடுக்க வேண்டும் என்றபோது கடலூர் மாவட்ட ஆட்சியர் வெற்றிச் செல்வன் சொந்த செலவில் 25 ஆயிரம் வெட்டி வேர் நாற்றுகளை வழங்கினார். அந்த நாற்றுகளை மாணவர்களும் தன்னார்வலர்களும் நட்டனர். 10 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். கீரமங்கலம் நக்கீரர் தென்னை நிறுவனம் 10 ஆயிரம் பனை விதைகளை வழங்கியது. குளத்திற்கு தலா ஒரு ஏக்கர் பரப்பளவில் 3 இடங்களில் மண் மேடு அமைத்து மரம் தங்கச்சாமி நினைவு குருங்காடுகளையும் அமைத்தனர். பறவைகளுக்காக குருங்காடு என்றனர்.
பணிகள் முடியும் போது கல்லணையில் தண்ணீர் வரத் தொடங்கியது. வந்த தண்ணீரை வீணாக்காமல் தூர்வாரிய குளத்திற்குள் பெருக்கிய போது தண்ணீரால் குளம் நிரம்பியது. குளம் நிரம்பியதால் இளைஞர்களின் மனம் குளிர்ந்தது. பல வருடங்களுக்கு பிறகு விவசாயிகள் முகத்தில் சந்தோசம் தெரிகிறது. அந்த சந்தோசத்தை காணத் தான் எங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்தோம். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளின் முகத்தில் சந்தோசத்தை காண போகிறோம் என்ற போது அவர்கள் முகங்களில் பூரிப்பு காணப்படுகிறது.
இந்தநிலையில்தான் இப்படியான ஒரு பணியை முடிக்க தாராளமாக நிதி வழங்கிய கொடையாளர்களை கௌரவிக்கவும் மனம் நிறைந்த சந்தோசத்தை வெளிப்படுத்தவும் ஒரு ஆனந்த திருவிழா நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.அந்த நாள் அக்டோபர் 7.. பேராவூரணி தனியார் மண்டபத்தில் நடந்த ஆனந்த விழாவில் கொடையாளர்களை கௌரவிக்க நீதியரசர் சுரேஷ்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் வெற்றிச் செல்வன், உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன், நீயா நானா கோபிநாத் ஆகியோர் அழைக்கப்பட்டனர். கொடையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களிலும் நீர்மேலாண்மைக்காக உழைத்து வரும் அமைப்புகள், தனி நபர்கள் என்று அனைவரையும் அழைத்து கௌரவப்படுத்தி உற்சாகமூட்டி மகிழ்ந்தனர்கள்.
விழாவில் பேசிய நீதியரசர் சுரேஷ் குமார்.. நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் நம் விவசாயிகள். அவர்களை புறந்தள்ளிவிட்டு எதையும் சாதிக்க முடியாது. இந்த இளைஞர்கள் நீர்மேலாண்மை விவசாயம் காக்க வெளிநாடுகளில் செய்த வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு வந்து குளத்தில் வேலை செய்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு நேரில் வந்து பாராட்டினேன். இப்போது கடும் பணிகளுக்கு இடையே அவர்களை கௌரவிக்க வேண்டும் என்பதால் வந்துவிட்டேன். புதுக்கோட்டை, ஆலங்குடியிலும் இன்று சங்கங்கள் சீரமைத்த பணிகளை பார்த்து பாராட்டினேன்.
கைஃபா இளைஞர்களின் இந்த பணி மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்மேலாண்மை என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் முக்கியமானது. அதைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள். மேலும் பணி தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள். தொடரட்டும் பணி. எங்களால் பொருளாதார உதவிகள் செய்ய முடியவில்லை என்றாலும் அவ்வப்போது வந்து அவர்களை தட்டிக் கொடுப்போம். இதேபோல கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக குளம் சீரமைத்து மரக்கன்றுகளை நடுகிறார்கள் என்னும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.