உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலபடுத்தப்பட்டுள்ளது.
ஊரங்கால் இந்தியா முழுவதும் ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டது. ஊரடங்கிற்கு முன்பு ரயில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வேயில் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வில் உள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், விழுப்புரம் வழியாகச் சென்னைக்கும் எனத் தினந்தோறும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தேவையான மருந்துகள், ரயில்வே ஊழியர்கள், பார்சல்கள் என முக்கியமானவைகள் கொண்டு செல்லப்படுகிறது.
ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மே மாதம் 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே ஊரடங்கை நீட்டித்தாலும் ரயில்களைச் சமூக விலகல் இடைவெளியைக் கடைப்பிடித்து இயங்கச் செய்யலாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தகவல் கூறுகின்றனர்.
அதற்கு முன்னேற்பாடாகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே, தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அறிவிப்பு கொடுத்துள்ளனர். மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துக் கொண்டு வரிசையில் வரும் பயணிகள் 6 அடி இடைவெளி விட்டு பிளாட்பாரம் வரும் வகையில், திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் அடையாளக் குறியீடுகள் போட்டுள்ளனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்னக ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, "நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளதால், ஊரடங்கு முடியும் வரை எந்த வித ரயில்களும் இயக்கப்படாது" என தெரிவித்துள்ளனர்.