கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி அமுதமொழி. கணவர் ராமகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதன் காரணமாக, அருகிலுள்ள தி.ஏந்தல் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டில் அமுதமொழி வசித்து வருகின்றார்.
நேற்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏந்தல் கிராமத்தைச் சுற்றி வந்துள்ளனர் அப்போது, வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அமுதமொழியிடம் பேச்சு கொடுத்த அவர்கள், அங்கிருந்த பித்தளை பாத்திரத்திற்கு பாலிஷ் போட்டு அதை பளிச்சென ஆக்கி அவரை நம்ப வைத்துள்ளனர்.
இதேபோல் தங்க நகைக்கும் பாலிஷ் போட்டால் புதிய நகை போல் இருக்கும் என நம்ப வைத்து அமுதமொழி அணிந்திருந்த நகைக்கு பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளனர். அவரும் தன் கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் தாலி செயினை கழட்டி அவர்களிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, தங்க நகை எடை அதிகம் உள்ளதால் வெந்நீரில் பாலிஷ் போட்டால்தான் பளிச்சென இருக்கும் என்று கூறியுள்ளனர். அதன்படி வெந்நீர் கொண்டு வருவதற்காக அமுதமொழி வீட்டுக்குள்ளே சென்றுள்ளார். வெந்நீருடன் அவர் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியுடன் மாயமாகி இருந்தனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனே கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் மர்ம நபர்களைத் தேடி அலைந்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அமுதமொழி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியில் வேறொரு வீட்டில் நகை பாலிஷ் போடுவதாகக் கூறி பேச்சு கொடுக்கும்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களைப் பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.